திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தந்தால் சன்மானம் என திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் போதைப்பொருள், குட்கா விற்பனை குறித்து தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்குள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல டன் குட்கா மற்றும் போதை பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விநியோகம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும், மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக காக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.