கிராமப்புற மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதை 10ம் வகுப்பு வரை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீபமாக எஸ்.சி/ எஸ்டி பிரிவினருக்கான உதவித்தொகை மற்றும் வருமான வரம்பு உயர்வு, ஓபிசி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு என பல்வேறு திட்டங்களுக்கான அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அதை தொடர்ந்து தற்போது கிராமப்புறத்தை சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-6ம் வகுப்பு வரை பயிலும் எம்பிசி மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏதுவாக வங்கிகளில் வைப்புநிதி தொடங்க 16.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது 3 முதல் 6ம் வகுப்பு வரை உள்ள மாணவியர்களுக்கு என்பதை மாற்றி 3 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க மாற்றங்கள் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.