அமெரிக்காவின் 50 சதவீத வரியால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் பாதிப்பை அடையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் திருப்பூரில் இருந்து அமெரிக்காவிற்கு ஏராளமான துணிகள் ஏற்றுமதியாகி வந்த நிலையில், தற்போது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் திருப்பூரை தவிர்த்து வங்கதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட வரி குறைவான நாடுகளில் ஏற்றுமதி செய்யும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி ஆயத்த ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களர்களுக்கு சலுகைகளை வழங்கி ஊக்குவிப்பதுடன், தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K