நாங்குநேரியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால் ஆதரவு கொடுக்க தயார் என திருநாவுக்கரசரின் கருத்தினால் காங்கிரஸார் கடுப்பில் உள்ளனர்.
நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த வசந்தகுமார் எம்பி ஆகிவிட்டதால், அவர் ராஜினாமா செய்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. நாங்குநேரி தொகுதியானது காங்கிரஸின் தொகுதியாக பார்க்கப்படும் நிலையில், இம்முறை இடைத்தேர்தலில் திமுக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு 10 இடங்களை கொடுத்துவிட்டதால், தமிழக சட்டபேரவையில் ஆதிக்கத்தை பலப்படுத்த நாங்குநேரில் போட்டியிட வேண்டும் என திமுக தரப்பு நினைக்கிறதாம். ஆனால், காங்கிரஸ் தரப்பு இதற்கு பிடி கொடுப்பதாய் இல்லை.
இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் முன்னர் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அத்தொகுதியை திமுகவுக்கு காங்கிரஸ் விட்டுத்தர வேண்டும். இதற்கு திருநாவுக்கரசர் பரிந்துரைக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது, திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் நாங்குநேரி தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே, திருச்சியில் சொந்த செல்வாக்கால்தான் ஜெயித்தேன் என திருநாவுக்கரசர் கூறியது காங்கிரஸ் கட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போதைய கருத்தால் கட்சியினர் கடுப்பாகி உள்ளனர்.