டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்திற்கு வரவேற்பு தருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது.
இந்த நிலையில், இந்த போராட்டம் குறித்து கருத்து கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையிலேயே அந்த நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு இருக்கலாம். ஆனால், அந்த போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். மதுபானம் முற்றிலும் தமிழகத்தில் ஒழிக்கப்பட வேண்டும். மது கடைகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.
"எங்கள் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை நாங்கள் வரவேற்போம். ஆனால், அதே நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அரசுக்கு நெருக்கடி கொடுக்கிற ஒரு விஷயமாக இது கையாண்டால், அதை எதிர்ப்போம்" என்றும் தெரிவித்தார்.
"பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பு கொள்கைகளை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை நடைமுறைப்படுத்தினால், நாமும் முழு மனதுடன் இந்த போராட்டத்தை வரவேற்கலாம், பாராட்டலாம்" என்று தெரிவித்தார்.