தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை மற்றும் எச். ராஜா ஆகியோரின் வீடுகளின் முன்பு திடீரென போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில், அவர்கள் வீட்டுக்காவலில் வைக்க திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற செய்தியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ₹1000 கோடி டாஸ்மாக் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை சமீபத்தில் தெரிவித்த நிலையில், திமுக அரசுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த வரிசையில், இன்று ஒரு முக்கியமான ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா ஆகியோரின் வீடுகள் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தின் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் அவரது வீடு முன் போலீசார் பாதுகாப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, பாஜக மாநில செயலாளர் வினோஜ் செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல், தமிழிசை சௌந்தரராஜன், எச். ராஜா மற்றும் அண்ணாமலை வீடுகளின் முன்பும் போலீசார் கண்காணிப்பு அமைத்துள்ளனர். இதனால், அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.