ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தை போல் இளைஞர்கள் திரும்புவார்கள் என்றால், அந்த இளைஞர்கள் திருமாவளவனுக்கு தேவையில்லை என விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர்கள் கட்சி தொடங்கும் போதெல்லாம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் பலவீனமாகும் என்று பேசுவார்கள். விஜயகாந்த் கட்சி தொடங்கிய போதும் இப்படித்தான் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போதும் இவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் யார் கட்சி தொடங்கினாலும், அவர்களுக்கு என்ன செல்வாக்கு இருந்தாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவர்களால் சேதப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த இயக்கத்தின் தளம் முற்றிலும் புதியது. இந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாடு என்பது முற்றிலும் புதியது. அந்த அடிப்படையில் தான் இயக்கத் தோழர்களுக்கும் எனக்கும் இணைப்பும் பிணைப்பும் இருக்கிறது.
எனவே சினிமா கவர்ச்சியின் மூலம் எங்கள் இளைஞர்களை திசைமாற்ற முடியாது, மடை மாற்றி விட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திருமாவளவன் கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.