திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் திருக்கார்த்திகை தமிழ்நாட்டில் முக்கியமான பண்டிகையாக உள்ளது. இந்நாட்களில் மக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றுவது மட்டுமல்லாது, சிவ் ஸ்தலங்களிலும் தீப ஆராதனை, வழிபாடு நடைபெறும். அப்படி ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் உள்ள மகாதீப மலையில் ஏற்றப்படும் மகாதீப தரிசனத்தை காண ஏராளமான மக்கள் பல மாவட்டங்களில் இருந்தும் வருகை தருகின்றனர்.
இந்த ஆண்டு மகாதீபத்திருவிழா இன்று (டிச.04) தொடங்கி 13ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மகாதீப மலையில் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு காரணமாக தீபத்திருவிழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி இருந்த நிலையில், திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு உறுதி அளித்தார்.
அதன்படி இன்று தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோவிலில் விடியற்காலையில் நடைபெற்றது. 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக தொடங்கியது. சிகர நிகழ்ச்சியாக 13ம் தேதி அதிகாலை 4 மணியளவில் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலையில் மகாதீபமும் ஏற்றப்படும். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Edit by Prasanth.K