வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கியது குறித்து அரசியலில் விமர்சகர் தமிழ் எழிலன் என்பவர் மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்தது இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
மாநாட்டிற்கு நிலம் தந்த விவசாயிகளை விக்கிரவாண்டியில் சந்தித்து.. அந்த பகுதியில்.. விருந்தளிக்காமல்.. தனது பனையூர் கட்சி ஆபீஸ்க்கு வரவைத்தார் விஜய்.
இப்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களையும் பல கிலோமீட்டர் பயணிக்க வைத்து தனது ஆபீஸில் நிவாரணம் வழங்குகிறார்.
இவரே நேரடியாக சென்றால்தானே கள நிலவரத்தையும், பாதிப்பையும் காணமுடியும்?
இப்படி ஏழை மக்களை சிரமப்படுத்தி.. நீண்ட தூரம் பயணிக்கவைத்து.. தன் இடத்திற்கு வரவழைப்பது மன்னர் காலத்தில் கூட நடந்ததில்லை. இவரா மக்களுக்கான அரசியலை செய்யப்போகிறார்?
தேர்தல் பிரச்சார நேரத்தில்தான் வெளியே வந்து மக்களை சந்திப்பாரா விஜய்? இல்லையெனில் பனையூர் ஆபிஸில் இருந்தே வீடியோ பிரச்சாரம் செய்வாரா?
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்க்க சென்றால்.. போக்குவரத்து பாதிப்பும், கூட்ட நெரிசலும் ஏற்படும் என இவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கூறுகிறார்கள்.
இதெல்லாம் கட்சி ஆரம்பிக்கும் முன்பு தெரியாதா? இதையே சாக்காக சொல்லி இன்னும் எத்தனை வருடங்களை ஓட்டுவார்கள்?
கூட்டத்தை சமாளிக்க காவல்துறை மற்றும் பயிற்சி பெற்ற தொண்டர் படை போதாதா?
எம்.ஜி.ஆர், விஜயகாந்த் உள்ளிட்டோரும் இப்படித்தானே மக்களை சந்தித்தார்கள்?
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல்.. பிரச்சார சமயத்தில் மட்டும் போய் பாரத்தால் எப்படி வாக்களிப்பார்கள்?
காலதாமதான அறிக்கைகளும், காலம் தாண்டிய நேரடி சந்திப்பும் பலனை தராது.
இனியாவது.. இப்படியான பெரும் இன்னல்களை மக்கள் சந்திக்கையில்.. உடனே சென்று சந்திக்க வேண்டும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கனமழை பாதித்த மாவட்டங்களுக்கு செல்லும் நிலையில்...
இவர் மட்டும்.. மக்களை தனது ஆபீஸ்க்கு வரவைப்பது சொகுசு அரசியல். மக்களுக்கான அரசியல் அல்ல.