அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளில் 5 வருடம் குடியிருந்தால் அவர்களுக்கு நிலம் சொந்தமென அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய இயற்கை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சூரப்பட்டு, சோழவரம் பகுதிகளில் 15 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் “கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு வீடுகள் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்திற்காக இந்து சமய அறநிலையதுறையிடம் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் சில மக்கள் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தங்கி வருகின்றனர். அவர்களில் வருமானம் மிக குறைவாக இருக்கும், 5 வருடங்களுக்கும் மேல் அந்த பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு அந்த நிலம் பட்டா செய்து அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
டெல்டா பகுதிகளை பொறுத்தவரை அரசு நிலங்களில் பல மக்கள் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் டெல்டாவில் தங்கள் மதிப்பை அதிகப்படுத்தி கொள்ள அதிமுக நினைப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் புயலில் வீடு இழந்த அரசு நில குடியிருப்போர்க்கு மட்டும்தான் இந்த வசதியா, அல்லது ஆண்டாண்டு காலமாக அரசு நிலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கும் இதன் மூலம் பயன் உண்டா என்பது பற்றிய எந்த விளக்கமும் அந்த அறிக்கையில் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.