தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறது. குறிப்பாக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்திருக்கிறது. அதிமுக கிட்டத்தட்ட தனது கூட்டணியை உறுதி செய்துவிட்டது. பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தாமாகா உள்ளிட்ட சில கட்சிகளுன் கூட்டணி அமைத்துவிட்டது.
திமுக வழக்கம்போல் தனது கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை சந்திக்கவிருந்தாலும் இதுவரை எந்த கூட்டணியிலும் இணையாத தேமுதிக, ராமதாஸ் பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒருபக்கம், விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வருகிற சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்ப மனு கொடுக்கும் பணிகளையும் துவங்கிவிட்டன. தவெக சார்பில் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கப்பட்டது. எனவே, இன்று காலை முதலே தவெக நிர்வாகிகள் பலரும் நேரில் வந்தனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தற்போது செய்தியாளர்களிடம் பேசிய சிடி நிர்மல்குமார் ஒன்றரை மணி நேரத்தில் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஜயின் பெயரில் எவ்வளவு மனுக்கள் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை கணக்கிட்டு வருகிறோம். மனுக்களை திரும்ப பெறும் நாள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.