மதுரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 வாகனங்களை 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தால் சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூர் பகுதியில் இரவு நேரத்தில் ஆட்டோக்கள் மற்றும் வேன்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த வாகனங்களை ஒவ்வொரு நாளும் இரவில் நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் வந்து எடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது.
அந்த வகையில் இன்று காலை, வாகனங்களை எடுக்க வந்தவர்கள் 25 வாகனங்கள் சேதம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்ட அனைத்து வாகனங்களையும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தால் சேதப்படுத்தியதாக தெரியவந்தது.
இந்த தகவலை தொடர்ந்து, அந்த சிறுவனை கண்டுபிடித்து காவல் துறையில் ஒப்படைத்தபோது, சிறுவன் போதையில் இருந்ததாக தெரிகிறது. பெற்றோருடன் ஏற்பட்ட சண்டையின் கோபத்தில் இந்த செயலைச் செய்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.