Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மருந்து நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவித்த சலுகைகள்!

கொரோனா தடுப்பு நடவடிக்கை – மருந்து நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவித்த சலுகைகள்!
, வியாழன், 2 ஏப்ரல் 2020 (20:20 IST)
தமிழகத்தில் உள்ள மருந்து பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகளை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்றோடு கொரோனா எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 110 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று 75 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல சலுகைகளை வழங்கியுள்ளார். இது சம்மந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு பின் வருமாறு;-

1.கொரோனா நோய் தடுப்புக்கான கீழ்க்காணும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கு சலுகைகள் வழங்கப்படும்.
i. உள் நுழைவு செயற்கை சுவாசக் கருவிகள்
ii. என்-95 முகக் கவசங்கள்
iii. கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள் - ஹைட்ராக்சிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின் , வைட்டமின்-சி (மாத்திரை மற்றும் திரவ வடிவில்)
iv. தனி நபர் பாதுகாப்பு கவச உடை.
v. பல்வகை பண்பளவு கணினித் திரைகள் (பாராமீட்டர் ஐசியு மானிட்டர்கள் )
2. மேற்படி மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத் துவங்கினால், சலுகைகள் வழங்கப்படும்.
3. குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.
4. தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, மொத்த மூலதனத்தில் 30 சதவீதம் மூலதன மானியம், 20 கோடி ரூபாய் உச்சவரம்பாகக் கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாகப் பிரித்து வழங்கப்படும்.
5. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறப்பு தொழில் நிறுவனங்களாக கருதப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும்.
6. மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்துவித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திருக்காமல் உடனடியாக உற்பத்தியை துவக்கலாம். உற்பத்தி துவக்கிய பின்னர் அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம். இவை அனைத்திற்கும் ஒற்றைச்சாளர அனுமதிகள் வழங்கப்படும்.
7. மேற்படி தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய கால அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிப்காட் மற்றும் சிட்கோ நிறுவனங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் / கூடாரங்கள் வழங்கப்படும்.
8. 100 சதவீத முத்திரைத் தாள் கட்டண விலக்கு வழங்கப்படும்.
9. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடனுக்கான (வொர்க்கிங் கேபிடல்) வட்டியில் 6 சதவீதத்தை இரண்டு காலாண்டுகளில் (31.12.2020 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மானியமாக அரசு வழங்கும்.
10. மேலும், அடுத்த நான்கு மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளில், குறைந்தபட்சம் 50 சதவீதத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும். இதற்கென திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
11. இத்திட்டத்தின்படி உற்பத்தி துவக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
12. பெரு நிறுவனங்களுக்கு சிப்காட் நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வணிக ஆணையரகமும் இச்சலுகைகளை வழங்குவதற்கான முகமை நிறுவனங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு - தமிழக டிஜிபி உத்தரவு