பொங்கலுக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு பைக்கு பதிலாக பணம் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பொங்கல் பை மற்றும் பணம் ஆகியவை ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்த நிலையில் தமிழகம் முழுவதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு 21 உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது.
ஆனால் அதில் இருந்த சில பொருட்கள் தரமற்றவையாக இருந்ததாகவும், வெல்லம் உள்ளிட்டவை இளகி போயிருந்ததாகவும் பல விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் எதிர்வரும் பொங்கலுக்கு தொகுப்பு பை வழங்கப்படுமா அல்லது பணமாக அளிக்கப்படுமா? என்ற கேள்வி இருந்து வந்தது.
ஆனால் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் இதுவரை பொங்கல் தொகுப்பு பைக்கான பொருட்களுக்கான டெண்டர் அறிவிக்கப்படவில்லை. இதனால் இந்த முறை ரூ.1000 பணமாக அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணத்தை ரேசன் கடைகள் மூலமாக நேரடியாக அளிக்கலாமா அல்லது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தலாமா என்பது குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.