கும்பகோணத்தில் தாய், தந்தையரை கொன்று 2 நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம் அருகே உள்ள தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் – லட்சுமி தம்பதியர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அதில் மூத்த மகன் மின்வாரியத்தில் பணிபுரிந்த நிலையில் சில ஆண்டுகள் முன்னதாக விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வந்த நிலையில் அவரும் உயிரிழந்து விட்டார். தற்போது இரண்டாவது மகன் ராஜேந்திரனுடன் அவரது தாய், தந்தையர் வாழ்ந்து வந்துள்ளனர். 45 வயதாகும் ராஜேந்திரனுக்கு திருமணமாகவில்லை. இதனால் அவர் மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி தன் தாய், தந்தையுடன் சண்டை போட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று ஆத்திரத்தில் ராஜேந்திரன் தனது தாய், தந்தையை வெட்டிக் கொன்றுள்ளார். அதன்பின்னர் எதுவுமே நடக்காதது போல் சர்வ சாதாரணமாக தினசரி வேலைக்கெல்லாம் போய் வந்து சமைத்து சாப்பிட்டு பிணங்களுக்கு நடுவே தூங்கியும் உள்ளார் ராஜேந்திரன்.
ராஜேந்திரன் வீட்டிலிருந்து சில நாட்களில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதாலும், அவரது பெற்றோரை காணாததாலும் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ராஜேந்திரன் வீட்டிற்குள் போலீஸார் நுழைந்தபோது அழுகிய நிலையில் ராஜேந்திரனின் பெற்றோர் பிணமாக கிடந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜேந்திரனை கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.