தமிழ்நாட்டில் பாஜக விரைவில் தனது சொந்த தொலைக்காட்சி சேனலை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக பாஜக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆர்.கே.நகரில் நோட்டாவுடன் போட்டிப் போட்ட பாஜக தற்போது சட்டமன்றத்திற்கு 6 எம்.எல்.ஏக்களை அனுப்பும் அளவு உயர்ந்துள்ளது. எனினும் பாஜகவின் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்துகளை தமிழக செய்தி ஊடகங்கள் பொருட்படுத்துவதில்லை என்ற கருத்து உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதை பலமுறை செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். மேலும் அண்ணாமலையின் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதும், அவர்கள் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றச்சாட்டுகள் வைப்பது நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பிற கட்சிகளுக்கு செய்தி சேனல்கள் இருப்பது போல பாஜகவுக்கும் ஒரு சேனல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா பாஜகவால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் ஜனம் டிவி சேனல் அதே பெயரில் தமிழ்நாட்டிலும் அறிமுகமாக உள்ளது. இந்த மாதத்தில் அண்ணாமலை நடத்துவதாக அறிவித்த பாத யாத்திரைக்கு முன்னால் சேனல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கர்நாடக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை செயல்பட்டு வருவதால் பாதயாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சேனல் நாடாளுமன்ற தேர்தலுக்குள் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.