தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறும் போது, மாநிலத்தில் மொத்தம் 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என். நேரு சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மேம்படுத்தும் உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தின் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதற்கான திட்டங்கள் ஏற்கெனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..