சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் கோயிலில் நகை காணாமல் போனது தொடர்பாக, கோயில் காவலாளியான அஜித் குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே காவல்துறையினர் தாக்கியதில், அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் காவல்துறையினரிடையே மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், கடுமையான கண்டனங்களையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு, அரசு பணிக்கான நியமன ஆணையை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வழங்கினார். அத்துடன், அஜித் குமாரின் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவியும் வழங்கப்பட்டது.
மேலும், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி மற்றும் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் நேரில் சென்று, இந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.