Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக ஆட்சியில் தமிழகத்தின் மொத்த கடன் ரூபாய் 9,29,959 கோடி.. அண்ணாமலை

Advertiesment
Annamalai

Siva

, வெள்ளி, 14 மார்ச் 2025 (18:55 IST)
திமுக ஆட்சியில், தமிழகத்தின் மொத்த கடன் ரூபாய் 9,29,959 கோடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
வழக்கம் போல, கழகக் கண்மணிகளின் ஒரு நாள் கரகோஷத்துக்காக, வெற்று விளம்பர அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு, தனது ஆண்டொரு நாள் கடமையை நிறைவு செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு.
 
தனது தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்புப் பொதுமக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது இந்த பட்ஜெட். 
 
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானவையான, 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை கொண்டு வரப்படும், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படுவதோடு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி  நிரந்தரம்  செய்யப்படுவார்கள்,  பழைய 
 
ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும், என எந்த வாக்குறுதிகள் குறித்தும், இந்த ஆண்டும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
 
ஆனால், வழக்கமாக, திமுக பட்ஜெட்டில், அறிக்கையளவிலேயே நின்று விடும் அறிவிப்புகளான, வடசென்னை வளர்ச்சித் திட்டம், அடையாறு சீரமைப்புக்கு ரூ.1,500 கோடி நிதி, மின்சாரப் பேருந்துகள், இந்து ஆலயங்களை புனரமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு போன்றவை தவறாது இடம்பிடித்திருக்கின்றன. ஆனால், நான்கு ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நான்கு ஆண்டுகளில், இவர்கள் அறிவித்த மின்சாரப் பேருந்துகள் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. ஆனால், அவற்றில் ஒரு பேருந்து கூட இன்னும் சாலையில் ஓடவில்லை என்பதுதான் நகைச்சுவை. ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாள் கூத்துக்கு அறிவிப்புகளை வெளியிடுவது, திமுக அரசின் பட்ஜெட் சம்பிரதாயம் ஆகிவிட்டது. 
 
கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.7,890 கோடி ரூபாய்  அறிவித்தார்களே தவிர ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு, ஒகேனக்கல் என்ற பெயரே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இது தவிர, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பெயர்மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் தவிர, மக்களுக்கான எந்தத் திட்டங்களும் இல்லாத, வழக்கமான திமுக பட்ஜெட்டாகவே இந்த ஆண்டும் இருக்கிறது.
 
ஆனால், இத்தனை ஆண்டுகளாக இலைமறை காயாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கேற்ற அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த திமுக அரசு, இனி வரும் எந்த ஆண்டுகளிலும் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காது என்பது தெரிந்ததும், வெளிப்படையாகவே சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.
 
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் பட்ஜெட்டில், கிழக்குக் கடற்கரை சாலை தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்திலும், திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஏற்கனவே தடம் பதித்திருப்பதைத் தற்செயலாக எடுத்துக் கொள்ள முடியாது. பொதுமக்கள் வரிப்பணத்தில், தனியார் நிறுவனங்கள் கொழிக்கத் திட்டங்கள் அறிவிக்கும் ஒரே அரசு திமுகவாகத்தான் இருக்க முடியும்.
 
தமிழக அரசின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, டாஸ்மாக் மதுபான விற்பனை. சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது. மது விற்பனை வருமானம் இல்லாத குஜராத் அரசு, ரூ. 19,695 கோடிக்கு வருமான மிகை பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் தமிழகம் ரூ.46,467 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது. குஜராத் அரசு உட்கட்டமைப்புக்குச் செலவிடும் தொகை ரூ.95,472 கோடி. தமிழகம் அதை விட மிகக் குறைவாக, ரூ.57,231 கோடி மட்டுமே உட்கட்டமைப்புக்குச் செலவிடுகிறது. குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கையில், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்காக, ரூ.9.62 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை.
 
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. வெற்று விளம்பர அறிவிப்புகளும், அதற்கான வீண் செலவுகளும் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது  திமுக.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாதுகாப்பு கேட்டால் கட்டணம் வசூலிக்கலாம்: சென்னை ஐகோர்ட்