தமிழகத்திற்கான புதிய மாநிலக் கல்விக் கொள்கையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2021-22 இடைக்கால பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கென தனி மாநில கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்க ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு, 2022-ல் அமைக்கப்பட்டது.
மாநிலக் கல்வி கொள்கையை தயாரித்த இந்த குழு, கடந்த ஜூலை மாதம் 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில், 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்த கூடாது என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழகத்திற்கான புதிய மாநிலக் கல்வி கொள்கையை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.