அண்மைக் காலமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வது ஒரு புதிய பொழுதுபோக்காகியுள்ளது. செல்பி, குழு புகைப்படங்கள் என பலரின் படங்களும் இந்த வடிவத்தில் மாற்றப்பட்டு வைரலாகிறது.
இந்நிலையில், இந்த நவீன ஜிப்லி புகைப்படத்தில் ஒரு அபாயம் மறைந்துள்ளது எனத் தமிழக சைபர் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நம்மை பற்றி பல விபரங்கள் சேமிக்கப்படும். முக அங்கங்கள், உணர்வுகள், வெளிப்பாடுகள் ஆகியவை அனைவரின் ஒப்புதல் இல்லாமலே சேகரிக்கப்படலாம்.
இந்த தரவுகள் முறையாக நீக்கப்படுவதில்லை, மேலும் அத்தகைய இணையதளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் தீப் ஃபேக் வடிவங்களில் மாற்றப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும், "ஜிப்லி புகைப்படம்" என்ற பெயரில் சிலர் தவறான இணையதள லிங்குகளை பகிர்ந்து, பயனாளர்களை மோசடிக்கு உள்ளாக்குகின்றனர். எனவே, ஜிப்லி புகைப்படம் உண்மையாகவே தேவையா என்பதை நன்றாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.