இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜராகினார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோதபண பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு “கால அவகாசம் வேண்டும்” என அமலாக்கத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், குற்றப்பத்திரிகை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஏப்ரல் 20ஆம் தேதி ஜாமீன் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.