தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெறும் 2-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 2024 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பங்கேற்பதற்காக வருகை வந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், விழாவில் மாணவர்களுடன் அமர்ந்து உற்சாகத்துடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளார்கள் என்று தெரிவித்தார்.
ஆனால், நமக்கு தற்போது தேவையாக உள்ளது நல்ல தலைவர்கள் தான் என்றும் நான் தலைவர்கள் என்று சொல்வது தலைவர்கள் என்று சொல்வது அரசியல் மட்டுமல்ல என்றும் ஒவ்வொரு துறையிலும் நமக்கு தலைவர்கள் தேவை என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் அரசியலும் ஒரு விருப்பமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த விஜய், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் தானே? என்று கேள்வி எழுப்பினார். அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று விஜய் தெரிவித்தார்.
உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல என்றும் இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் விஜய் தெரிவித்தார்.