மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே, கள்ளிக்குடி பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில், கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், மதியம் உணவு இடைவேளையின் போது 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கிடையே தண்ணீர் குழாயில் டிபன் பாக்ஸ் கழுவும் போது , மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிவடைந்தவுடன் பள்ளி எதிரே இருக்கும் காலியான இடத்தில் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டு தகாத வார்த்தையால் திட்டி அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்வதாகவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கள்ளிக்குடி காவல் துறையினர் பள்ளி இயங்கும் நேரம், முடிவடையும் நேரங்களில் இப்பகுதியில் ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ,அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பம் குறித்து, கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.