ராகிங் கொடுமையால் எம்பிபிஎஸ் மாணவர் படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து ஏழு சீனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் எம்பிபிஎஸ் மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் கொடுமை செய்ததில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த மே 15 ஆம் தேதி இந்த ராக்கிங் கொடுமை நடந்துள்ள நிலையில் தற்போது தான் இந்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது என்றும், முதலாம் ஆண்டு மாணவரை 300க்கும் அதிகமான முறை தோப்புக்கரணம் போட வைத்ததாகவும் இதில் சிறுநீரக அழுத்தம் ஏற்பட்டு அந்த மாணவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே அந்த மாணவருக்கு நான்கு முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவரது உடல்நிலை படிப்படியாக தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் கல்லூரி முதல்வர் நடத்திய விசாரணையில் ராக்கிங் கொடுமை உறுதி செய்யப்பட்டதால் ஏழு சீனியர் மாணவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஏழு மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ராஜஸ்தான் காவல்துறை ஏழு மாணவர்கள் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.