இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு விமான நிலையத்தின் பின்புறம் என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி ஈஸ்வரன் பேசிய கருத்துக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
திமுகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்ட ஒருவர், கோவை பாலியல் தாக்குதலுக்குள்ளான மாணவியின் மீதே பழியை சுமத்திப் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளை பற்றி எதுவும் கூறாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி, முற்றிலும் பிற்போக்குத் தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
திமுக ஆட்சியில், குட்டியை வைத்து ஆழம் பார்க்கும் குரங்கு கதையாக, முதலில் தனது ஊதுகுழல்களில் யாரையாவது வைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சுமத்தி செய்தியாக்கி, பின்னர் அந்த வழக்கை அப்படியே நீர்த்து போகச் செய்வது வழக்கமாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும், மாணவியின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடும் அளவுக்கு கீழ்த்தரமாக நடந்து கொண்டது இந்த திமுக அரசு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தவிர, கோவை மாணவி வழக்கில், குற்றவாளிகள் குறித்த மேலதிக தகவல்களை, காவல்துறை இதுவரை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுகிறது. வழக்கம்போல, திமுக அரசில் செயலிழந்து நிற்கும் சட்டம் ஒழுங்கை மறைக்க, மடைமாற்றும் முயற்சிகளில் ஒன்றாகவே, திமுக, தனது கூட்டணிக் கட்சியினரை இது போன்று பேச தூண்டுவதும் கருதப்படும்.