தேசிய பழங்குடியினர் இளைஞர் விழாவில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் பெருமை குறித்து பிற மாநில பழங்குடி மக்களிடையே பேசியுள்ளார்.
நேரு யுவகேந்திராவின் 15வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா சென்னையில் அடையாரில் உள்ள இளையோர் விடுதியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் வருகை புரிந்துள்ளனர். இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
அப்போது பழங்குடி இளைஞர்களிடையே பேசிய அவர் “இந்தியாவில் 10 கோடிக்கும் மேல் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடி மக்கள் மேம்படுதலே நாட்டையும் மேம்படுத்தும். பழங்குடி மக்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ் மொழி மிகவும் பழமையான மொழி. ஒரு வாரம் இங்கே இந்த விழாவில் கலந்து கொள்ளும் நீங்கள் விழா முடிந்து செல்லும்போது குறைந்தது 12 தமிழ் வார்த்தைகளாவது கற்றுக்கொண்டு செல்லுங்கள். தமிழகம் மற்ற மாநிலங்களை விட பாதுகாப்பான மாநிலம். தமிழகத்தின் கலாச்சாரம், உணவுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பு” என்று கூறியுள்ளார்.