அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
''ஏழை, எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் தேர்வுக் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணமாக தாள் ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணமாக பெறப்பட்டு வந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி 225 ரூபாயாகவும் பட்டயப் படிப்புக்கான சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. செமஸ்டர் ஒன்றுக்கு 9 தாள்கள் எழுத வேண்டியிருக்கும் நிலையில் ஏற்கனவே கட்டி வந்த தேர்வுக் கட்டணத்தை விட தற்போது கூடுதலாக 2,000 ரூபாய் கட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் தேர்வுக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்விக்கட்டணத்தையே செலுத்த சிரமப்படும் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசையும் வலியுறுத்துகிறேன்' 'என்று தெரிவித்துள்ளார்.