நாடு முழுவதும் HMPV வைரஸ் பரவி வருவதை அடுத்து, தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிய வேண்டும் என தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
HMPV வைரஸ் புதிது அல்ல. இது ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸாகும். 2001-ம் ஆண்டு இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நோய்த்தொற்றுகள் சுயக்கட்டுப்பாடு, உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது, ஓய்வு எடுப்பது போன்ற கவனிப்புடன் சரி செய்யப்படுகின்றன.
தற்போது சென்னை, சேலத்தில் தலா ஒருவர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது நிலையாக இருக்கின்றனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் பெரிய அளவில் பாதிப்புக்கான அறிகுறி இல்லை.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் தமிழ்நாடு சார்பில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் HMPV வைரஸ் நிலையாக இருக்கிறது என்றும், அதுகுறித்து பீதி அடையவேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
தும்மல், இருமல் வரும்போது வாய், மூக்கை மூடுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசல் மிகுந்த இடங்களில் முககவசம் அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்துக்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த் தொற்றுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் HMPV வைரஸ் தொற்றுக்கும் உள்ளன.
இந்த வைரஸ் தொற்று கட்டுப்படுத்தக்கூடியது என்பதால் பீதி அடையத் தேவையில்லை. இவ்வாறு அந்த அறிக்கைஇயில் கூறப்பட்டுள்ளது.