கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக உள்ள ஜஸ்டின் ரூடோ ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
அவர் மீண்டும் தேர்தலில் நிற்கக்கூடாது என அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும், பிரதமர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்த அந்த கட்சி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தலில் லிபரல் கட்சியை வெற்றி பெறச் செய்ய, ரூடோ பிரதமராக தொடரக்கூடாது என அவரது சொந்த கட்சியினர் வலியுறுத்திய நிலையில், தற்போது அவர் தனது பிரதமர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கனடாவில் இந்து கோயில்கள் தாக்குதல் நடத்தப்பட்டது, இந்தியா மீது குற்றம் சாட்டியது உள்பட பல்வேறு சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியில் நடந்தது. இதனால், இந்தியாவிடம் மோதல் போக்கை அவர் கடைபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, அடுத்த தேர்தலில் கனடா பிரதமர் தோல்வி அடைவார் என எலான் மஸ்க் கணித்திருந்ததும், அவருக்கு பெரும் பின்னடைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.