பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட நிலையில், அதில் ரொக்கப்பணம் ரூ.1000 இல்லாதது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கும் என்றும், அதன் பிறகு பொருட்கள் விநியோகம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத் தொகையுடன் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், ரொக்கப் பணம் இடம்பெறாததற்கான காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு புயல் மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்கான மாநில நிதியில் இருந்து செலவிட்டுள்ளோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,00 கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, அந்த நிதிசுமையை தமிழக அரசு ஏற்றது. பொங்கல் பரிசுத் தொகைக்கு ரூ.280 கோடி செலவாகியுள்ளது.
நல்ல சூழல் விரைவில் உருவாகும். அதேபோல், மகளிர் உரிமை தொகையை ரூ.1,000 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.