தமிழகம் முழுவதும் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என்றும், அதன் பிறகு மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்ட நிலையில், தற்போது 11.50 லட்சம் சாதாரண மின் மீட்டர்களை மின்வாரியம் வாங்கி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மீண்டும் டெண்டர் கோரப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தற்போதைய சூழலில், ரூ.160 கோடி செலவில் 8 லட்சம் சிங்கிள் ஃபேஸ் மீட்டர்கள் மற்றும் 3.5 லட்சம் மும்முனை மீட்டர்கள் வாங்க மின்வாரியம் சமீபத்தில் ஆணை வழங்கியுள்ளது.
விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட இருக்கும் நிலையில், இந்த 11.5 லட்சம் சாதாரண மீட்டர்கள் தேவையற்ற செலவு என பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்தபோது, "புதிய மின் இணைப்பு கேட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களுக்கு மின் மீட்டர் அவசியம் என்பதால், இந்த 11.5 லட்சம் சாதாரண மீட்டர்களை வாங்க ஆணை வழங்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.