பாமக நிறுவனர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்றும், அவர் தினந்தோறும் ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கண்ணகி நகரில் விழுதுகள் சேவை மையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின் முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழகத்திற்கு அதானி வந்து முதல்வரை சந்தித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அது குறித்து உங்கள் விளக்கம் என்ன?" என்று கேட்கப்பட்டதற்கு,
"இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; அதனால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை," என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டு இருந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கடந்த ஜூலை மாதம் 10ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாகச் சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?.
அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.