இஸ்லாம் மதத்திற்கு மாறாவிட்டால் பாலியல் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளி விடுவேன்" என மனைவி மிரட்டியதாகக் கணவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விஷால் என்பவர் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலித்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், அவரது மாமா மற்றும் தாய் ஆகியோர் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டதை அடுத்து, சில மாதங்களுக்கு பிறகு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது.
அதன் பின்னர் தன்னை இஸ்லாமிய மதத்திற்கு மாற்ற தனது மனைவி கட்டாயப்படுத்தியதாகவும், தனது மனைவியின் அம்மா, மாமா ஆகியோர் மற்றும் மத குருமார்களால் தான் எச்சரிக்கப்பட்டதாகவும் விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். "எனது மனைவியின் மாமா நான் தினமும் தொழுகை செய்கிறேனா என்று கண்காணிப்பார் என்றும், நான் தொழுகை செய்யும் போது புகைப்படங்கள் எடுத்து அனுப்ப சொன்னார் என்றும்" கூறிய விஷால், "என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிட்டனர் என்றும், இல்லையென்றால் என்னை பாலியல் வழக்கில் சிக்க வைப்பதாக ஒன்று சேர்ந்து மிரட்டினார்கள்" என்றும் சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து முறையான புகார் வரவில்லை என்றும், புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த பதிவுக்கு இந்து அமைப்புகள் சிலர் களத்தில் இறங்கி போராட தொடங்கி இருக்கின்றன. "கட்டாய லவ் ஜிஹாத் நடைபெறுகிறது" என்று கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த பிரச்சனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.