செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில், நீதிபதி அபய் எஸ். ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தபோது பரபரப்பான வாதம் செய்யப்பட்டது.
முதலில் இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து முதலில் உங்கள் பதில் என்ன? -என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டனர். அதற்கு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது என அமலாக்கத்துறை வாதம் செய்தது
இதனையடுத்து மீண்டும் நீதிபதிகள், நீங்கள் கைப்பற்றிய டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துங்கள். எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள்.
நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலைத் தான் எதிர்பார்க்கிறோம் என நீதிபதிகள் கூறினர்.
தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால் அதைத் தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறீர்கள் என்றும், நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
மேலும் இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால் நாளை தள்ளி வைக்கிறோம் பதில் கூறுங்கள் என நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.