''தனியார் மயமாக்கல் குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தொழிற்சங்கங்களுடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அடிக்கடி சொல்லிவரும் போக்குவரத்துத் துறை அமைச்சர், இன்றுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணம் என்ன?'' என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:
தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிக்கும் தனியார் மயமாக்கல் முடிவை எதிர்த்து, மாநகரப் பேருந்து ஓட்டுநர்களின் திடீர் வேலை நிறுத்தத்தினால் மக்கள் துயருற்றிருப்பது வேதனையளிக்கிறது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் மூலம், நாளை முதல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக வரும் செய்திகளே, இந்த முன்னறிவிப்பு இல்லாத வேலைநிறுத்தத்திற்கு முக்கியக் காரணம்.
இந்த அறிவிப்பு எழுந்தவுடனேயே, ஆளும் கட்சியின் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதனையெல்லாம் கருத்திற்கொள்ளாமல் தனியார் மயமாக்குதலை தீவிரப்படுத்திய அரசின் நடவடிக்கைகளாலேயே மக்கள் இன்று அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தனியார் மயமாக்கல் குறித்து பிரச்னை எழும்போதெல்லாம் தொழிற்சங்கங்களுடன் பேசி உரிய முடிவு எடுக்கப்படும் என்று அடிக்கடி சொல்லிவரும் போக்குவரத்துத் துறை அமைச்சர், இன்றுவரை எந்தவொரு தீர்க்கமான முடிவை எடுக்காததன் காரணம் என்ன?
மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனே இந்த பிரச்னையில் முதலமைச்சர் தலையிட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேசி இணக்கமான முடிவை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.