திருப்பூரில் ரோந்து பணி சென்ற சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேலை தலையை வெட்டிக் கொன்ற கொலையாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரனின் சிக்கனூத்து தோட்டத்தில் வேலை பார்த்து வந்தவர் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி. இவரும் இவரது மகன்கள் மணிகண்டன், தங்கபாண்டியன் ஆகியோரும் நேற்று முன் தினம் இரவு குடும்ப தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய தகவல் காவல்கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற நிலையில், இரவில் ரோந்து பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இதுகுறித்து விசாரிக்க சென்றுள்ளார். அவருடன் அழகுராஜ் என்ற காவலரும் உதவிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர்களை சமரசம் செய்ய முயன்றபோது மணிகண்டன் ஆத்திரத்தில் அரிவாளை எடுத்து சண்முகவேலை தலையை தனியாக வெட்டி வீசி கொடூரமாக கொன்றுள்ளார். அதன்பிறகு காவல் வாகனத்தையும் அடித்து உடைத்து, வாக்கி டாக்கியையும் சேதப்படுத்திவிட்டு மணிகண்டன், மூர்த்தி, தங்கபாண்டி உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
அதை தொடர்ந்து 5 தனிப்படைகளை அமைத்த போலீஸார் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு சோதனையை பலப்படுத்தி குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் மூர்த்தியும், தங்கபாண்டியும் தாங்களாகவே வந்து சரணடைந்த நிலையில், மணிகண்டன் இருக்குமிடத்தை போலீஸார் விசாரித்துள்ளனர்.
அதில் மணிகண்டன் தலைமறைவாக இருக்கும் இடம் தெரிய வந்து போலீஸ் குழுவினர் அங்கு சென்றுள்ளனர். அப்போது மணிகண்டன் மற்றொறு சப் இன்ஸ்பெக்டரான சரவணக்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு இழப்பீடாக அவரது குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K