காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதேநேரம், தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைத்தளங்களில் பலரும் மத்திய அரசு மற்றும் எடப்படி தலைமையிலான அதிமுக அரசுக்கும் எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல், காவிரி நீர் மற்றும் ஸ்டெர்லைட் விவகாரத்திலும், இளைஞர்கள் இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இதனையடுத்து மெரினாவின் கண்ணகிசிலை, விவேகானந்த இல்லம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், கும்பலாக வருபவர்களிடம், வாகனத்தில் செல்பவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.