தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கலவரம் வெடித்து அப்பாவி மக்கள் சுட்டுக்கொள்ளபட்டனர். இதன் பிறகு ஆலை மூடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா அமர்வு முன்னிலையில் இன்று நடந்தது.
இந்த விஷயத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது, இதனால் சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கு இரண்டு முறை விசாரணைக்கு வந்த போதும், ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என்றும் கேட்டிருந்தனர்.
ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞரோ, இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது என்று பதில் அளித்தார். இருப்பினும் மனுதாரர் தரப்பு வாதங்கள் நியாயமாக் இருந்ததால் இந்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.