டீசல் கிடைக்காமை காரணமாக சில வாரங்களுக்கு முன்னர் 15 நாட்கள் தொடர்ச்சியாக தொழிலுக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது என்கிறார் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதைச் சேர்ந்த அப்துல் றஹீம். இவர் - பலநாட்கள் கடலில் பயணித்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெரிய படகு ஒன்றில் பணியாற்றுகின்றார்.
இப்போதும் மூன்றாயிரம் ரூபாவுக்கு மட்டுமே ஒவ்வொருவருக்கும் டீசல் வழங்கப்படுவதாகவும், அதனால் தங்கள் படகுக்குத் தேவையான டீசலை நான்கு, ஐந்து பேரை தனித்தனியாக அனுப்பி கொள்வனவு செய்வதாகவும் அவர் கூறுகின்றார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டமை காரணமாக, கடற்றொழிலாளர்களும் கடுமையான கஷ்டங்களை தமது தொழில் நடவடிக்கைகளில் எதிர்கொண்டு வருகின்றனர் என, அப்துல் றஹீம் தெரிவிக்கின்றார்.
கடற்றொழிலில் ஈடுபடும் படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட தோணிகளுக்கு எரிபொருட்கள் தேவைப்படுகின்றன. பலநாட்கள் கடலில் பயணிக்கும் பெரிய படகுகளுக்கு டீசலும், ஒருநாள் தொழிலில் ஈடுபடும் சிறிய படகுகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட தோணிகளுக்கு மண்ணெண்ணெயும் பயன்படுத்தப்படுகின்றன.
விளம்பரம்
கடந்த வருடம் நடுப்பகுதியில் 111 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் டீசல் தற்போது 176 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அப்போது 77 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை - இப்போது 87 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடற்றொழிலுக்கான செலவும் கணிசமாக உயர்ந்துள்ளது.
சுமார் 15 நாட்கள் கடலில் பயணித்து மீன்பிடியில் ஈடுபடும் பெரிய படகு ஒன்றுக்கு கிட்டத்தட்ட 420 லீட்டர் டீசல் தேவைப்படும் என்கிறார் அப்துல் றஹீம். ஒரு நாள் தொழிலில் ஈடுபடும் சிறிய படகு ஒன்றுக்கு சுமார் 35 லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படும் எனவும் அவர் கூறுகிறார்.
ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள், ஜனாதிபதிக்கு எதிரான கோஷம் – நள்ளிரவில் வெடித்த வன்முறையை காட்டும் படங்கள்
எரிபொருள்களுக்கு விலை அதிகரித்துள்ள போதிலும், அவற்றுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை நெருக்கடி மீனவர்கள்
மீன்பிடி தொழிலில் பயன்படுத்தப்படும் கலங்களில் மொத்தம் 06 வகை உள்ளதாக, கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் கல்முனையில் அமைந்துள்ள அம்பாறை மாவட்டக் காரியாலயம் தெரிவிக்கின்றது. அவற்றில் 04 வகையானவை - இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் தோணிகளாகும். இவற்றுக்கே எரிபொருள்கள் தேவையாக உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் தோணிகள் மொத்தமாக 1484 உள்ளன.
மோட்டார் இயந்திரங்கள் பொருத்தப்படாத, துடுப்புகளால் ஓட்டப்படும் 172 கரைவலைத் தோணிகளும் இம் மாவட்டத்தில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் செயற்பாட்டிலுள்ள மீனவர்கள் 14,424 பேர் உள்ளனர். கடற்றொழில் சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை 65,344 ஆகும். இந்த மாவட்டத்தின் மொத்த மீனவர் குடும்பங்களின் எண்ணிக்கை 13,500 என கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்களுக்கான விலையேற்றம் காரணமாக கடற்றொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மறுபுறமாக, மீன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
'கீரி' மீன் முன்னெரெல்லாம் அதிகபட்சமாக ஒரு கிலோ 400 அல்லது 500 ரூபாவுக்கு மேல் விற்பனையானதில்லை. ஆனால், சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் அமைந்துள்ள சில்லறைச் சந்தைகளில் 1300 ரூபாவுக்கு ஒரு கிலோ கீரி மீன் விற்கப்பட்டது. இப்படி அனைத்து வகை மீன்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
கடல் மீன்களை வாங்கி, மொத்தமாக விற்பனை செய்து வருபவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த இஸ்திகார். மீன்களை சாய்ந்தமருதில் இருந்து கொழும்புக்குக் கொண்டு செல்வதற்காக, முன்னர் தனது வாகனத்துக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் போதுமானதாக இருந்தது என்கிறார். ஆனால் தற்போது 18 ஆயிரம் ரூபாவுக்கு டீசல் தேவைப்படுவதாக அவர் கூறுகின்றார்.
அதேவேளை, வாகனத்துடன் செல்லும் கூலியாட்களுக்கு சாப்பாட்டுச் செலவாக முன்னர் 02 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாகவும் தற்போது 04 ஆயிரம் ரூபா கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த பயணத்துக்காக வாகன சாரதி 4500 ரூபாவை கொடுப்பனவாகப் பெற்று வந்ததாகவும், தற்போது 06 ஆயிரம் ரூபாவை பெறுவதாகவும் இஸ்திகார் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் காரணமாகவே, இவ்வாறு அதிக தொகையினை அவர்கள் கேட்டுப் பெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மற்றொருபுறம், தற்போதைய காலகட்டத்தில் மீன் வியாபாரம் குறைவடைந்துள்ளதாகவும், மக்களிடம் பணம் இல்லாமையே அதற்கான காரணம் எனவும் இஸ்திகார் குறிப்பிட்டார்.
புத்தளம் பிரதேசத்திலிருந்து இறால் வகைகளைக் கொள்வனவு செய்து, அவற்றினை அம்பாறை மாவட்டத்தில் இஸ்திகார் மொத்தமாக விற்பனை செய்தும் வருகின்றார்.
கடந்த காலத்தில் எரிபொருள்களுக்கான விலைகள் குறைவாக இருந்தபோதும், கடற்றொழிலாளர்களுக்கு குறிப்பிட்டளவு எரிபொருளை அரசு இலவசமாக வழங்கி வந்தது.
2012ஆம் ஆண்டு தொடக்கம் 2013 மே மாதம் வரையில் அப்போதைய அரசாங்கம் கடற்றொழியலார்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றினை இலவசமாக வழங்கியதாக கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட காரியாலம் தெரிவிக்கின்றது.
மாதமொன்றுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபா பெறுமதியான டீசலும், 18 ஆயிரம் ரூபா பெறுமதியான மண்ணெண்ணையும் இலவசமாக வழங்கப்பட்டன.
ஆனால், 2013ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச எரிபொருள்கள் நிறுத்தப்பட்டன. இதனால் கடற்றொழிலுக்கான செலவு மீண்டும் அதிகரித்தது.
இந்த பின்னணியில், தற்போது எரிபொருள்களுக்கான விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், கடற்றொழிலாளர்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமையினால், ஏற்கனவே அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் மூடப்பட்ட பின்னர், அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழில் மூலமாகக் கிடைக்கும் மீன்களின் தொகையும் குறைவடைந்துள்ளன.
உதாரணமாக அம்பாறை மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டு சுமார் 20,177 மெட்றிக் தொன் மீன்கள் கிடைத்தன. 2018இல் 17806 மெட்றிக் தொன் மீன்கள் பிடிபட்டன. பின்னர் அந்தத் தொகை 2019ஆம் ஆண்டு 10,852 மெட்றிக் தொன்னாக குறைவடைந்தது. இந்த நிலையில் கடந்த வருடம் (2021) சுமார் 8656 தொன் மீன்களே கிடைத்ததாக கட்றொழில் நீரியல் வள திணைக்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆக, கிடைக்கும் மீன்களின் அளவில் பாரியளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், எரிபொருள்களுக்கான விலை அதிகரிப்பு மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடற்றொழிலாளர்கள் பெரும் நெருக்குவாரங்களைச் சந்தித்து வருகின்றனர்.
சிலவேளை படகுகளில் கடலுக்குச் சென்று, மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் போது - தாம் நஷ்டத்தினை எதிர்கொள்ள வேண்டியேற்படுவதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர். இப்போதுள்ள எரிபொருள்களின் விலையில் அந்த நஷ்டம் மிகவும் அதிகமானது என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
'உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு' மீனவர்கள் கடலுக்குச் செல்வதாக பலரும் கூறுவார்கள். அந்தளவு அபாயங்கள் நிறைந்தது இந்தத் தொழில். ஆனால், இப்போதைய கால கட்டத்தில் - மீனவர்கள் கரை திரும்பிய பிறகும் 'உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான்' வாழ வேண்டி உள்ளது என்கிறார், கல்முனையில் நாம் சந்தித்த கடற்றொழிலாளர் பாறூக்.