ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கண்டிப்பாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக போட்டியிடுமா அல்லது போட்டியிடாதா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலுக்கு பிறகு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய இரண்டு இடைத்தேர்தல் நடந்துள்ள நிலையில், இந்த இரண்டிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்த போது, திமுக அதிமுக நேரடியாக மோதிய நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். எனினும், அதிமுக வேட்பாளர் வெறும் 25% வாக்குகளை மட்டுமே பெற்றார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடந்த போது, அதிமுக தேர்தலை புறக்கணித்தது. அதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும் இந்த முறை புறக்கணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வரும் 11 ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக வெற்றி கழகம் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்று கூறிவிட்டது. எனவே, காங்கிரஸ், பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.