ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று பறக்கும் படையினர் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் அவர்கள் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மற்ற தொகுதிகளில் விதிமுறைகள் அமலுக்கு இல்லை என்றும், தேர்தல் விதிமீறல் ஏற்படுவதை தடுக்க மூன்று பறக்கும் படைகள், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள், ஒரு வீடியோ கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ பார்வையாளர்கள் குழு மற்றும் ஒரு தணிக்கை குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, உரிய ஆவணம் இன்றி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை கொண்டு செல்லக்கூடாது என்றும், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் பறக்கும் படை தெரிவித்துள்ளது.