சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக, அதிமுகவின் 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிறப்பு புலனாய்வு குழு அவரை கைது செய்தது.
இந்த கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறுமி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம், அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த ப. சுதாகர், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.