சீர்காழியில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த தாய் மற்றும் அவரது கள்ள காதலனை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ள நிலையில், தற்போது மூன்றாவது கணவர் பிரசாந்த் என்பவருடன் வசித்து வந்தார்.
பிரசாந்துடன் பழகி 7 மாத கர்ப்பிணியான குழந்தையின் தாய், தனது கள்ள காதலனான பிரசாந்துடன் சேர்ந்து இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, அடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எங்கள் குழந்தையை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என ஆணவமாக பேசி உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் பிடித்து வைத்து, சைல்ட் லைன் எண் 1098-க்கு தகவல் அளித்தனர். இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயிலாடுதுறை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தையை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து, இது தொடர்பாக சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்று கொண்ட சீர்காழி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமையிலான காவலர்கள் விசாரணை மேற்கொண்டு, குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த தாய் மற்றும் அவரது மூன்றாவது கணவர் பிரசாந்த் ஆகிய இருவரையும் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இரண்டரை வயது குழந்தையை, பெற்ற தாயின் உதவியுடன் மூன்றாவது கணவர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.