"நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி." இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாகச் சொல்லப்படும் சொற்றொடர்.
தன்னை மற்றவர்கள் பார்க்கும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக, மக்களைக் கொன்ற இரக்கமற்ற ஒருவராக கிரிசெல்டா பிளாங்கோ அறியப்படுகிறார். 1970கள் மற்றும் 80களில் மியாமியில் மிகவும் அஞ்சப்படும் பெயர்களில் ஒருவராக பிளாங்கோ விளங்கினார்.
புகழ்பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரான பிளாங்கோவின் கதை ஹாலிவுட் வரை சென்றிருக்கிறது. அவரின் கதையை ‘கிரிசெல்டா’ (Griselda) என்னும் பெயரில் நெட்ஃபிளிக்ஸில் தொடராக வெளியாகவிருக்கிறது. கிரிசெல்டா கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை சோஃபியா வெர்கரா நடித்துள்ளார்.
ஆறு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடரில் கிரிசெல்டா, மோசமான குற்றவாளியாகக் காட்டப்பட்டுள்ள அதேவேளையில், புத்திசாலியான மற்றும் லட்சியப் பெண்ணாகவும் காட்டப்பட்டுள்ளார்.
தன் மூன்று கணவர்களின் கொலைக்குக் காரணமான, "கொக்கைன் தெய்வம்" என்று பெயர்பெற்ற கிரிசெல்டாவின் உண்மைக் கதை மிகவும் இருண்டது.
இந்தத் தொடரில் புத்திசாலியான மற்றும் லட்சியப் பெண்ணாக காட்டப்பட்டுள்ளார் கிரிசெல்டா.
கடந்த 1943இல் கொலம்பியாவில் பிறந்த பிளாங்கோ, 11 வயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபட்டார். ஒரு பணக்கார குடும்பத்தின் மகனைக் கடத்தி, சிறுவனின் பெற்றோர் பணம் வழங்க மறுத்ததால் அச்சிறுவனை பிளாங்கோ சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
தனது 21 வயதில் மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் சட்ட விரோதமாக 1964இல் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்து கஞ்சா விற்கத் தொடங்கினார்.
"கிரிசெல்டா தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது அவர் யார் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர் மூன்று குழந்தைகளை முற்றிலும் தனியாக வளர்த்து வந்த புலம் பெயர்ந்தவர். அவரிடம் கல்வியோ அல்லது வாழ்வாதாரமோ எதுவும் இல்லை," என்று சோஃபியா வெர்கரா பிபிசியிடம் கூறினார்.
கிரிசெல்டா பிளாங்கோவின் "சிக்கலான பாத்திரத்தை மனிதாபிமானப்படுத்த" விரும்புவதாகக் கூறுகிறார் தொடரின் தயாரிப்பாளரான எரிக் நியூமன். ஏனெனில், "ஒவ்வொரு நபருக்கும் தன் வாழ்க்கை குறித்த விளக்கம் இருக்கிறது. தவறான உறவில் இருந்து தப்பிக்கும் ஒரு தாய், சில நேரங்களில் யாரோ அடையாளம் காணக்கூடிய பாத்திரமாக இருக்கலாம்,” என்கிறார் அவர்.
"ஆண்கள் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் உலகில் கோலோச்சிய பெண் அவர். அவர் தன்னை நிரூபிக்க பத்து மடங்கு கடினமாக உழைத்திருக்கிறார். மேலும், தன்னைச் சுற்றியுள்ள ஆண்களை விஞ்சுவதற்குத் தனது புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துகிறார். மக்கள் அவரை ஆதரிக்கத் தொடங்குகிறார்கள்," என்று இணை இயக்குநர் ஆண்ட்ரேஸ் பைஸ் கூறினார்.
கிரிசெல்டா பிளாங்கோ கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இளம் பெண்களை உள்ளாடைகளில் கொக்கைனை மறைத்து வைத்து அனுப்பினார்.
போதைப்பொருள் கடத்தல் தீவிரமடைந்து, போட்டி கும்பல்களுடன் வன்முறை ஏற்பட்டதால் பிளாங்கோ மிகவும் இரக்கமற்றவராக ஆனார். 1975ஆம் ஆண்டில், தன் பணத்தைத் திருடுகிறார் என்ற சந்தேகத்தால் அவர் தனது கணவரையே சுட்டுக் கொன்றார். மேலும், 1983ஆம் ஆண்டில், தன்னுடைய மூன்றாவது கணவரையும் கொலை செய்துவிட்டு மகனுடன் மியாமியை விட்டு வெளியேறினார்.
அவருடைய மிருகத்தனமான மற்றும் இரக்கமற்ற நடத்தைக்காக அவர் ‘பிளாக் ஸ்பைடர்’ (தன் ஆண் துணையையே கொன்று திண்ணும் அமெரிக்க சிலந்தி வகை) என அழைக்கப்படுகிறார். பிளாங்கோவின் போதைப்பொருள் கடத்தல் சாம்ராஜ்யம் செழித்து வளர்ந்தது. 1980களின் முற்பகுதியில் அவர் உலகின் பணக்கார, பலருக்கும் மிகவும் பயத்தை வரவழைக்கும் பெண்களில் ஒருவராக இருந்தார். அமெரிக்காவுக்கு ஒவ்வொரு மாதமும் 1.5 டன் கொக்கைன் கடத்தப்படுவதை மேற்பார்வையிட்டார்.
"கிரிசெல்டா முதன்முதலில் மியாமிக்கு குடிபெயர்ந்தபோது, தன் குடும்பத்தை கவனித்துக்கொள்வதுதான் அவருடைய நோக்கமாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால், அந்தப் பயணத்தில் அவர் தொலைந்து போய்விட்டார். அதிகாரமும் பணமும் அவரை அரக்கியாக மாற்றிவிட்டது," என்று வெர்கரா பிபிசியிடம் கூறினார்.
பிளாங்கோ 1980-களின் முற்பகுதியில், தனது சாம்ராஜ்யத்தை விட்டுக் கொடுப்பதற்காக போட்டி கடத்தல் கும்பலில் இருந்து வந்த 15 மில்லியன் டாலர்கள் வாய்ப்பை நிராகரித்தார்.
70களின் பிற்பகுதியில் கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு கொக்கைன் வழித்தடங்களின் மூளையாக இருந்தவர் கிரிசெல்டா பிளாங்கோ.
'ஆபத்தை உணர்ந்திருந்தார்'
சுமார் 20 ஆண்டுகளாக மியாமியில் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தபோதிலும், கிட்டத்தட்ட ஆதிக்கம் நிறைந்த ஆண்களால் மட்டுமே நடத்தப்படும் ஒரு தொழிலில் ஒரு பெண்ணாக, தனது நிலை ஆபத்தானது என்பதை பிளாங்கோ நன்கு அறிந்திருந்தார்.
ஒரு கட்டத்தில், தன் வணிகத்தை ஓர் ஆண் நிர்வகிக்க அனுமதித்தார். ஏனெனில், அந்த நேரங்களில் “ஆணிடமிருந்து வரும் ஒப்பந்தங்களை மட்டுமே உள்ளூர் வணிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்."
ஒரு கொலைக்காக அவர் கைது செய்யப்பட்ட பிறகு, பிளாங்கோ போதைப்பொருள் வணிகத்திற்குத் தானே தலைமை தாங்க முடிவு செய்தார். வெளியாள் என்ற பிம்பத்தை அவர் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்.
கடந்த 1980ஆம் ஆண்டில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், சுமார் 1,35,000 கியூபர்கள் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். மெரில்டோஸ் (Marielitos) என்று அழைக்கப்படும் அவர்களில் சிலர் ஏற்கெனவே குற்றப் பின்னணி கொண்ட கும்பல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையாளிகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்.
கிரிசெல்டா பிளாங்கோவாக சோஃபியா வெர்கரா நடித்துள்ளார்.
பிளாங்கோ இதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களைத் தன்னிடம் வேலைக்குச் சேர்த்தார். மற்றவர்களைக் கொலை செய்ய அவர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் செய்த கொலைகள், ‘மோட்டார் சைக்கிள் கொலைகள்’ எனப் பெயர் பெற்றன.
பிளாங்கோ "ஒரு வெளிநாட்டவர், அவர் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து வெளியாட்களையும் வேலைக்கு அமர்த்தினார்," என்று இணை இயக்குநர் ஆண்ட்ரேஸ் பைஸ் கூறினார். “மேலும் இத்தொழிலில் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதும் அதைக் காப்பாற்றுவதும் கடினம். அப்படியிருக்கும் நிலையில்தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும்,” என்கிறார் பைஸ்.
"தன் வேலையாட்களை கிரிசெல்டா தனது குடும்பத்தின் ஓர் அங்கமாக உணரச் செய்தார்" என்று பைஸ் மேலும் கூறினார்.
பிளாங்கோவின் அனுபவத்தில் தானும் சிலவற்றை உணர்ந்திருப்பதால் வெர்கரா, பிளாங்கோ மீது ஈர்க்கப்பட்டிருக்கிறார்.
"நான் கொலம்பியாவை சேர்ந்தவள், ஒரு தாய் மற்றும் வேறொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவள். கிரிசெல்டா ஒரு பெண்ணாக மதிப்பிடப்பட்டார். இன்று என் உச்சரிப்பு காரணமாக நான் அதிகமாக வேலை செய்ய வேண்டும். மேலும், எனக்குக் குறைவான வாய்ப்புகள்தான் உள்ளன என்பதை நான் அறிவேன்," என்று அவர் கூறினார்.
ஜூலியானா ஐடன் மார்டினெஸ் இந்தத் தொடரில் ஜூன் ஹாக்கின்ஸாக நடிக்கிறார்.
பிளாங்கோவின் குற்றவியல் சாம்ராஜ்யம் 1980-களின் நடுப்பகுதியில் நொறுங்கத் தொடங்கியது. கலிபோர்னியாவின் இர்வின் நகரில் அவர் கைது செய்யப்பட்டபோது அவரது சாம்ராஜ்யம் திடீரென முடிவுக்கு வந்தது.
ஆனால், இருபது ஆண்டுகளாக மியாமியை போதைப்பொருள் வணிகத்தின் கேளிக்கை பூங்காவாக பிடிபடாமல் மாற்றியது எப்படி? இந்தத் தொடரின் பின்னணியில் உள்ள குழுவினர் அதற்கு அவரது பாலினம் காரணம் என்று கூறுகின்றனர்.
"அவர் ஒரு பெண்ணாக இருந்ததால், அவரால் பல விஷயங்களில் இருந்து விடுபட்டு, அவருக்குத் தேவைப்படும்போது மறைந்துவிட முடியும். ஒரு பெண் அந்த அளவுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலை நடத்துவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பெண் ஒருபோதும் அவ்வளவு தீயவளாக இருக்க முடியாது என்று மக்கள் நினைக்கிறார்கள்," என வெர்கரா கூறினார்.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்க முடியாது என்று ஆண்கள் தலைமையிலான போதைப்பொருள் கும்பல்களே கூறியிருக்கலாம். இதனால், விசாரணையில் பிளாங்கோ சிக்காமல் இருந்திருக்கலாம்.
பணிநீக்கம் செய்யப்பட்டு, தனது சக ஊழியர்களுக்கு ஸ்பானிய மொழி பெயர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த மியாமி காவல் துறையின் உளவுத்துறை ஆய்வாளரான ஜூன் ஹாக்கின்ஸ், 1970களின் நடுப்பகுதியில் இருந்து பிளாங்கோவை பிடிக்கும் நோக்கத்தில் இருந்தார்.
பிளாங்கோவின் கதையில் இன்றியமையாத பகுதியாக ஹாக்கின்ஸ் இருந்ததாக எரிக் நியூமன் கூறினார். "அவர் கிரிசெல்டாவின் கண்ணாடி, அவர் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்த ஓர் இளம் தாய், பெண்களை இழிவுபடுத்தும் உலகில் அவர் பணிபுரிந்தார்," என்கிறார் நியூமன்.
கிரிசெல்டா பிளாங்கோவின் வாழ்க்கை சோகமான முடிவைக் கொண்டது.
பிப்ரவரி 17, 1985இல், பிளாங்கோ அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் கொக்கைன் தயாரித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்ததற்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். கூடுதலாக, அவர் மீது மூன்று கொலை வழக்குகள் சுமத்தப்பட்டு இருபது ஆண்டுகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கழித்தார்.
அவரது சிறை தண்டனையின்போது, அவரது மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2004இல் விடுவிக்கப்பட்டவுடன், அவர் கொலம்பியாவிற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர் அமைதியான வாழ்க்கையை நடத்தினார்.
செப்டம்பர் 3, 2012 அன்று, அவர் தனது 69வது வயதில், மெடலினில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தன் குழுவினரால் பின்பற்றப்பட்டு வந்த கொலை பாணியின் படியே அவரும் கொல்லப்பட்டார்.
"அவருடைய கொலை அவர் மீதான வெறுப்பின் உண்மையான அளவைக் காட்டுகிறது. 2012இல், அவர் எந்தத் தீங்கும் செய்யாத ஒரு பெண்ணாக தனிமையில் வாழ்ந்தார். அவருடைய நான்கு குழந்தைகளில் மூன்று பேர் இறந்துவிட்டனர்," என்று நியூமன் பிபிசியிடம் கூறினார்.
"நம்ப முடியாத தருணங்களை அவர் அனுபவித்தார். இந்தக் கதை சோகங்கள் நிறைந்த ஒரு இழப்புடன் முடிவடைகிறது," என்றார் அவர்.
பிளாங்கோவின் வாழ்க்கை பெரும்பாலும் புத்தகங்களில் குறிப்பிடப்படவில்லை. போதைப்பொருள் கடத்தல் காலத்தில் கொலம்பியாவில் வளர்ந்த வெர்காரா கூட, "அவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை" என்று கூறினார். மேலும், அவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்த பிறகு அது ஓர் உண்மைக் கதை என்று நம்புவதற்கு “சாத்தியமில்லை" என்று நினைத்தார்.
"அதனால்தான் நான் கிரிசெல்டாவாக நடிக்க விரும்பினேன். அவர் ஒரே நேரத்தில் தாய், வில்லி, காதலி, கொலையாளி என எல்லாமாக இருந்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, மனிதர்கள் எவ்வளவு சிக்கலானவர்களாக இருக்க முடியும் என்பதைக் காட்டுகிறார்," என்றார் அவர்.