Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதான் பாசிசப்போக்கின் உச்சம் – சீமான் கண்டனம்!

இதுதான் பாசிசப்போக்கின் உச்சம் – சீமான் கண்டனம்!
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (11:07 IST)
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான மத்திய அரசின் தடை பாசிசப்போக்கின் உச்சம் என சீமான் கண்டனம்.


இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடைவிதித்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது. நாடறியப்பட்ட சனநாயக அமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் வீரியமிக்கச் செயல்பாடுகளை முடக்குவதற்காகத் தொடுக்கப்பட்டுள்ள இக்கொடும் அடக்குமுறை நடவடிக்கையானது பாசிசப்போக்கின் உச்சமாகும்.

பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாடு முழுமைக்கும் இசுலாமிய மக்கள் மதஒதுக்கலுக்கும், கொடுந்தாக்குதல்களுக்கும், உரிமைப் பறிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகிற வேளையில், இசுலாமிய மக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பான நலவாழ்வுக்காகவும் பாடுபடுகிற வலிமைவாய்ந்த இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக்குமுறலையும், ஆற்றாமையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டையும், மக்களையும் மதத்தால் துண்டாடி, வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி, பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் மக்களின் வாக்குகளை வேட்டையாடி, ஆட்சியதிகாரத்தை அடைந்து, இந்தியாவை இந்துராஷ்டிராவாக மாற்ற முனையும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு எவ்விதத் தடையுமில்லாத நாட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா போன்ற மக்கள் இயக்கங்களுக்குத் தடைவிதிக்கப்படுவது இந்நாட்டின் சனநாயகத்தையும், மதச்சார்பின்மையையும் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும்.

ஆகவே, இத்தடை நடவடிக்கை என்பது பாஜக அரசின் இசுலாமிய வெறுப்பினாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையேயாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தையும், வன்மையான எதிர்ப்புணர்வையும் பதிவுசெய்வதோடு, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கம் சட்டத்தின் உதவியோடு தடையைத் தகர்த்து மீண்டுவர துணைநிற்போமென உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு