Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 ரூபாய் திமுக அரசுக்கு ஆடம்பர கார் பந்தயம் ஏன்? சீமான் கேள்வி..!

Advertiesment
seeman

Siva

, சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:51 IST)
மாதம் 1000 ரூபாய் கொடுத்தால்தான் வாழவே முடியும் என்ற வறுமையான சூழலில் மக்களை வாட வைத்துவிட்டு வீண் ஆடம்பர கார் பந்தயம் யாருடைய விருப்பத்திற்கிணங்க நடத்துகிறீர்கள்?  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களைப் பணிநிரந்தரம் செய்யாமல், பதவி உயர்வு தராமல் தொகுப்பூதியம் கொடுக்கும் அளவுக்கே அரசின் நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் ஆடம்பர கார் பந்தயம் தேவைதானா?
 
அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க முடியாததால், ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக்கியதோடு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் ஆடம்பர கார் பந்தயம் தேவைதானா? மின்சார வாரியம் பல கோடி கடனில் இருக்க அதை சமாளிக்க மின்சாரக் கட்டணத்தை ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் 3 முறை ஏற்றி அடித்தட்டு நடுத்தரக் குடும்பங்களை வதைத்துக்கொண்டு இந்தப் பகட்டு போட்டி தேவைதானா? அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பை சீரமைக்கத் தனியார் முதலாளிகளிடம் கையேந்தும் அளவுக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டு நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் ஆடம்பர கார் பந்தயம் தேவைதானா?
 
மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் வாழவே முடியும் என்ற வறுமையான சூழலில் மக்களை வாட வைத்துவிட்டு வீண் ஆடம்பர கார் பந்தயம் யாருடைய விருப்பத்திற்கிணங்க நடத்துகிறீர்கள்? ஏற்கனவே ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டிகளை சென்னையில் நடத்தி, அதற்காகப் பலநூறு கோடிகள் செலவில் விளம்பரங்களும் செய்து, தி.மு.க அரசு சாதித்தது என்ன? அதனால் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட ஒரு நன்மையைச் சொல்ல முடியுமா? அப்படியே உங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்காக மகிழுந்து பந்தயம் நடத்தினாலும், அதனை மக்கள் பயன்படுத்தும் தீவுத்திடல், அண்ணா சாலையில் நடத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது?
 
அதற்கென இருக்கும் இருங்காட்டுகோட்டை, சோழவரத்தில் உள்ள பந்தயத் திடலில் நடத்தலாமே? அதற்கான வசதி இல்லையென்றால், பந்தயக் கட்டமைப்பைக்கூட எற்படுத்த திறனற்ற திராவிட மாடல் அரசு எதற்கு கார் பந்தயம் நடத்த வேண்டும்? மக்கள் பயணிக்கும் சாலையை மறித்து யாரை மகிழ்விக்க இந்த கார் பந்தயம்? கார் பந்தயம் நடத்தியதால் தீர்ந்த மக்கள் பிரச்சனைகள் எத்தனை? ஈர்த்த முதலீடு எவ்வளவு? தமிழ்நாட்டுக்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் எத்தனை? கார் பந்தயம் நடத்துவதால் பாமர மக்களின் பஞ்சம் பசி மாறிவிடுமா? அல்லது மக்கள் தலைமேல் உள்ள கடன்சுமைதான் கரைந்துவிடுமா?
 
சென்னையின் முதன்மைச் சாலையில் கார் பந்தயம் நடத்தி மகிழ்வதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் மக்களை வாட்டி வதைப்பது என்ன நியாயம்? கார் பந்தய வழித்தடத்தில் உள்ள மருத்துவமனைகளிடம் ஒலி மாசு ஏற்படுத்திக்கொள்ள அனுமதி, ராணுவத்திடம் அனுமதி, பாதுகாப்புப்படையினரிடம் அனுமதி என இத்தனை வேகத்தையும், அக்கறையையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதில் காட்டியிருந்தால் ஒரு தமிழ் மீனவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்களே?
 
ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழ்நாட்டிலிருந்து உருவாக்கத் திறனற்ற தி.மு.க அரசு, கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? மாவட்டந்தோறும் ஏழைக் குழந்தைகளின் விளையாட்டு திறனறிந்து பயிற்சியளிக்கச் செலவு செய்யாமல், கையேந்தி கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு என்ன பயன்? ஆகவே, பகட்டுக்காக, பொழுதுபோக்குக்காக ஆடம்பர கார் பந்தயம் நடத்தி மகிழும் முடிவை ஆயிரம் ரூபாய் தி.மு.க அரசு கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" 
 
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 
Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோடு ரோலரை ஏற்றி நொறுக்கப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள்.. ஆறாக ஓடிய மது..!