Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை அரசு நடத்த முனைப்பு காட்டுவது ஏன்? டிடிவி தினகரன்

Advertiesment
TTV Dinakaran

Mahendran

, புதன், 31 ஜூலை 2024 (13:37 IST)
தமிழகத்தில் தலைவிரித்தாடும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடுகளை களைய எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு தனியார் நிறுவனத்தின் கார்பந்தயத்தை நடத்த தீவிர முனைப்பு காட்டுவது ஏன் ? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த தனியார் நிறுவனத்தின் பார்முலா - 4 கார் பந்தயம், மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுகவினருக்கு தொடர்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, என ஒட்டுமொத்த தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் திமுக அரசு, மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி கார்பந்தயம் நடத்த தீவிரம் காட்டுவது கடும் கண்டனத்திற்குரியது.
 
தனியார் நிறுவனம் நடத்தும் கார் பந்தயத்திற்காக கடந்த ஆண்டே தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட மக்களின் வரிப்பணமான 40 கோடி ரூபாய்க்கான செலவு விவரங்கள் இதுவரை வெளிவராத நிலையில், தற்போது விளம்பரதாரர்கள் எனும் பெயரில் கட்டாய நிதி வழங்கும் படி தொழிலதிபர்களையும், தொழில் நிறுவனங்களையும் திமுக அரசு கட்டாயப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
ஏற்கனவே, தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் ஏற்படும் சிக்கல், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிலையில், ஒரு சிலரின் விருப்பத்திற்காகவும், லாபத்திற்காகவும் நடத்தப்படும் கார் இந்த பந்தயத்திற்காக கட்டாய நிதி வழங்குமாறு அழுத்தம் கொடுப்பது தொழில் நிறுவனங்களை முற்றிலுமாக முடக்கும் செயலாகும்.
 
கார் பந்தயங்களை நடத்துவதற்கென சென்னை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் பிரத்யேக மைதானம் இருக்கும் நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணாசாலை, துறைமுகம் என எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் சென்னையின் மத்தியப் பகுதி சாலைகளைச் சுற்றி கார்பந்தயம் நடத்தியே தீருவோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பிடிவாதம் காட்டுவது ஏன் ?
 
எனவே, தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை சென்னை அல்லாத புறநகர் பகுதியில் மக்களுக்கு எந்தவித பாதிப்பையும், இடையூறுகளையும் ஏற்படுத்தாத வகையில் நடத்துவதோடு, பல கோடி ரூபாய் செலவில் நடைபெறும் இந்த கார் பந்தயத்தினால் தமிழக மக்களுக்கும் அரசுக்கும் கிடைக்கப் போகும் பயன் என்ன ? என்பதை விளக்கிடுமாறு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிலச்சரிவில் ஒரு ஊரையே காணவில்லை; ஆற்றின் பாதையும் மாறியது: மக்கள் அதிர்ச்சி..!