Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீமானை கட்டித்தழுவிக் கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை! - புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பு!

சீமானை கட்டித்தழுவிக் கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை! - புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பு!

J.Durai

, திங்கள், 29 ஜூலை 2024 (14:47 IST)
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபல மருத்துவர் ஜெம் பழனிவேலுவின் சுயசரிதை நூலான ‘கட்ஸ்’ வெளியீட்டு விழா கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 
 
இதில் டாடா குழுமத்தின் இயக்குனர் சந்திரசேகர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். 
 
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மருத்துவர் ஜெம் பழனிவேலு படித்த அரசு நடுநிலைப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் வையாபுரி ஆகியோர் பங்கேற்றனர்.
 
விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, தமாக ஜி.கே.வாசன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான்,சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் புத்தகம் குறித்து வாழ்த்து பேசினர். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேடையில் பேசியதாவது:-
 
ஒரு மாணவன் டாக்டர் ஆவது என்பது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு தொழிலாளி டாக்டர் ஆவது என்பது மிகப்பெரிய  ஒன்றாகும். ஜெம் பழனிவேலு பள்ளிக்கல்வியை இடையில் நின்றவர் மீண்டும் படிப்பை தொடர்ந்து வெற்றியடைந்துள்ளார்.  மனிதாபிமானம் அதிகமுள்ள மருத்துவராக திகழ்கிறார் என தெரிவித்தார்.
 
நிகழ்ச்சியில் டாடா குழும இயக்குனர் சந்திரசேகர் மேடையில் பேசியதாவது:-
 
ஒருவர் எங்கு பிறக்கிறார் என்பது முக்கியமில்லை. அவர் எந்த நிலையை அடைகிறார் என்பதிலேயே அவரது வாழ்க்கையின்  வெற்றி இருக்கிறது. சூழ்நிலைகளை நாம் மாற்ற முடியாது.அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதிலிருந்து தான் வெற்றி  கிடைக்கும்.
டாக்டர் பழனிவேலு, பி.சி.ராய் விருது உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய விருதுகளை பெற்றிருப்பது சாதாரணமானது அல்ல. 
ஒருவர் வெற்றிகரமானவராக உருவாவதற்கு அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்கு குணங்கள் வேண்டும் என்று  திருவள்ளுவர் கூறியுள்ளார்.அந்த குணங்கள் டாக்டர் பழனிவேலுவிடம் உள்ளது. அவரை வாழ்த்துகிறேன் என்றார்.
 
விழாவில் மருத்துவர்  பழனிவேலு ஏற்புரை நிகழ்த்தினார் 
அப்போது மேடையில் பேசியதாவது:-
 
உலகளவில் கடந்த நூற்றாண்டில் பல்வேறு தலைவர்கள் நிபுணர்கள் குறித்த புத்தகங்கள் வெளிவந்தன.ஆனால் டாக்டர்கள்  குறித்து எந்த புத்தகமும் வரவில்லை.இந்த குறையை போக்குவதற்காக அகில இந்திய டாக்டர்கள் சங்கம் சார்பில் கருத்தரங்கம்  ஒன்றில், மருத்துவத்துறையில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொகுத்து ஒரு நூலை வெளியிட்டிருந்தனர்.அதில் எனது வாழ்வில் நடந்த சம்பவங்களும் சில  பக்கங்களில் வெளியாகியிருந்தது. அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.  அதன் பின்னரே முழு புத்தகம் எழுதும் எண்ணம் வந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்த போது அவர் எனது  வாழ்க்கை வரலாறை எழுத ஊக்குவித்தார்.அதனாலேயே வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதினேன். நாமக்கல் மாவட்டத்தில்  வறண்ட பகுதியில் பிறந்த எனக்கு படிக்காவிட்டால் கூலி வேலை செய்யத் தான் போக வேண்டும். அதற்காகத் தான் நான்  படித்தேன். எம்.பி.பி.எஸ் படிக்க சீட் கிடைத்தபோது, படிப்பிற்கான கட்டணத்தை எனது கிராமத்தினர் தான் கட்டினார்கள்.எனது  கல்விக்கு ஆசிரியர்கள் தான் அடித்தளம் அமைத்தனர்.எனது வெற்றிக்கு பின்னால் இவர்கள் இருக்கின்றனர் என்பதை நன்றியுடன் தெரிவிக்கவே இந்த புத்தகம் எழுதினேன் என்றார்.விழாவில் அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், சக்ரபாணி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, செங்கோட்டையன், காமராஜ்,  தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துகளை பறிமாறிக்கொண்டனர்.
 
அதுபோல் அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி தங்கமணி ஆகியோர் அண்ணாமலையிடம் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டசபையில் குட்கா கொண்டு சென்ற வழக்கு.! இந்த தேதியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!