நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து மீண்டும் மீண்டும் பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சமீபத்தில் பெரியார் உறவுகளுக்கிடையேயான உடலுறவு குறித்து பேசியதாக சொன்ன கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து சீமான் மீது பல்வேறு மாவட்டங்களிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புகளும் சீமானை கண்டித்து போராட்டம் நடத்தின.
ஆனாலும் சீமான் தொடர்ந்து பெரியாரை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்காகவே சீமான் இவ்வாறு பேசி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் “பெரியார் மண் என்று சொல்லாதீர்கள். இது சேர, சோழ, பாண்டியன் மண். இது என் மண், தமிழ் மண். எங்களுக்கு இது பெரியார் மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
மேலும் “பெரியார்தான் முதன்முதலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தமிழ்நாட்டில் நடத்தினார் என்று துணை முதலமைச்சர் உதயநிதி பேசுகிறார். முதன்முதலில் தமிழ்நாட்டில் இந்தி பள்ளியைத் தொடங்கியதே உங்கள் பெரியார்தான். எல்லாரையும் படிக்க வைத்த பெரியார் உங்களை படிக்க வைக்காமல் விட்டுவிட்டார், வெரி சாரி” என பேசியுள்ளார். சீமான் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.